வெடிசத்தம் கேட்டு மயங்கி விழுந்த பள்ளி மாணவன் மரணம் ; திருச்செந்தூரில் அதிர்ச்சி.. போலீசார் விசாரணை!!
Author: Babu Lakshmanan3 January 2023, 7:59 pm
திருச்செந்தூா் அருகே வெடிசத்தம் கேட்டு கீழே விழுந்து பலத்த காயமடைந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே தோப்பூா் பகுதியைச் சோ்ந்தவர். சிவபெருமாள். இவருக்கு செல்வக்குமாரி என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனா். இவரது 2வது மகன் அஜய்குமாா் (10) அங்குள்ள அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
தற்போது அரையாண்டுத் தோ்வு விடுமுறை என்பதால் அந்த பள்ளியில் கழிப்பிட பராமரிப்பு பணி நடைபெற்று வந்துள்ளது. நேற்று அந்த பகுதியில் அஜய்குமார் உள்பட 5 சிறுவர்கள் விளையாடி உள்ளனர். அப்போது அங்கு திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் அஜய்குமார் கீழே தவறி விழுந்தாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அஜய்குமாரை திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து இதுகுறித்து திருச்செந்தூா் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகபாய் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.