திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்: ‘அரோகரா’ கோஷத்துடன் வழிபட்ட பக்தர்கள்!!

Author: Rajesh
16 February 2022, 11:16 am

திருச்செந்தூர்: 2 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

நேற்று இரவு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். மாசித்திருவிழாவின் 10ம் திருநாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் காலை 6.30 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது. முதலில் விநாயகர் தேர், 2வது சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளும் பெரிய தேர், 3வது தெய்வானை அம்பாள் எழுந்தருளும் தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக வெளிவீதி நான்கிலும் பவனி வந்தது.

இந்த திருவிழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்குப் பின் இன்று தேரோட்டம் நடைபெறுவதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 1536

    0

    0