மினி கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய பயங்கரம்… அப்பளம் போல நொறுங்கிய கார் ; 4 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!!
Author: Babu Lakshmanan31 July 2023, 2:09 pm
மதுரை – திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் கார் மினி கன்டெய்னர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமங்கலம் அருகே கள்ளிக்குடி அடுத்த நல்லமநாயக்கன்பட்டி நான்கு வழிச்சாலை பகுதியில் விருதுநகர் பகுதியில் இருந்து திருமங்கலம் நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. நல்லமநாயக்கன்பட்டி நான்கு வழிச்சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென கார் நிலை தடுமாறி சென்டர் மீடியாவில் மோதியது.

மோதிய வேகத்தில் அடுத்த சாலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற மினி கண்டெய்னரில் மோதியது. இதனால், மினி கண்டெய்னர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், கண்டெய்னர் லாரியில் வந்த லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
அதேபோல, காரில் வந்த மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காரில் வந்தவர்கள் கன்னியாகுமாரி மாவட்டம் செங்குடி அடுத்த செங்கண்குழி விலை குமரன்குடி சேர்ந்த செல்வம் மகன்கள் ஜேம்ஸ் மார்ட்டின்(34), சாம் டேவிட்சன் (30) செல்வமுத்து மகன் கமலேஷ்(50) என்பது தெரிய வந்தது. இவர்கள் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்கின்றனர்.
அதேபோல, கர்நாடகா பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி பிளிப்கார்ட் சாமான்களை மதுரை விராதனூரைச் சேர்ந்த செல்வகுமார் ஏற்றி சென்ற போது விபத்தில் உயிரிழந்தது தெரிய வந்தது.