பொறுங்க பாஸ்.. விஜயுடன் நான் மேடையேறவா? – திருமாவின் கணக்கு தான் என்ன?
Author: Hariharasudhan21 November 2024, 2:59 pm
தவெக உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்க என திருமாவளவன் கூறியது மீண்டும் அரசியல் மேடையில் பேசுபொருளாக மாறியுள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று (நவ.20) இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வந்தார். தொடர்ந்து, அவர் இன்று (நவ.21) காலை வின்ச் ரயில் மூலம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர், படிப்பாதை வழியாக மலை அடிவாரத்துக்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், 2026ஆம் ஆண்டு விஜய் உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், “பொறுத்திருந்து பாருங்கள்” எனக் கூறினார். இது தவெக உடன் கூட்டணியா என்பதை சூசகமாகக் கூறியிருக்கிறார் என நினைத்தால், மறுபுறம் மற்றுமொரு தகவலும் வருகிறது.
அது என்னவென்றால், தனியார் மாத இதழ் வெளியிடும் அம்பேத்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவனுக்கும், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், விசிக – தவெக கூட்டணி உருவாகுமா என்ற கேள்வியும் எழுந்து வந்தது.
இந்த நிலையில் தான், புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க மறுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் உடன் மேடையில் சமப் பங்கிட திருமா விரும்பவில்லையா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஒருபக்கம் தவெக உடன் கூட்டணிக்கு பொறுக்கச் சொல்லிய திருமாவளவன், மறுபக்கம் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாகக் கூறப்படுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், தன்னுடன் வருபவர்களுக்கு அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும் எனக் கூறினார். அதற்கு முன்னதாகவே, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை ஆளும் திமுக உடன் கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் முன் வைத்திருந்தார்.
இதையும் படிங்க: ஹேர் டிரையரால் துண்டான விரல்கள்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!
எனவே தான், திருமாவளவனுக்கு விஜய் மறைமுக அழைப்பா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், திமுக கூட்டணியிலே விசிக தொடரும் என ஸ்டாலினைச் சந்தித்தப் பிறகு திருமா கூறினார். அதேநேரம், அதிமுக உடன் கூட்டணி இல்லை என அறிவித்து உள்ள தவெக, ஆரம்பம் முதலே கசிந்து வரும் விசிக உடனான கூட்டணி தகவலுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருப்பதும் மர்மமாகவே இருக்கிறது.