அது கடன் தான்.. ஆளும் தரப்புக்கு திருமா மறைமுக அழுத்தம்? அப்போ இபிஎஸ் சொன்னது?
Author: Hariharasudhan3 December 2024, 12:44 pm
எதிர்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலளிக்க வேண்டியது ஆளும் தரப்பின் கடன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விழுப்புரம்: வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயலால் முதலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனையடுத்து, புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடந்தது.
இந்த நேரத்தில் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாகப் பாதித்தது.
அது மட்டுமின்றி, திருவண்ணாமலை தீப மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடும்பமே மறைந்த செய்தி தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், நெடுஞ்சாலைகள், தென்பெண்ணை கரையோரப் பகுதி மக்கள் என ஃபெஞ்சல் புயல் விட்டுவைக்காத இடமே இல்லை.
இந்த நிலையில், ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பாதிப்பு அறிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எதிர்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பதில் அளிப்பதில்லை” என்றார் ஸ்டாலின்.
இதனையடுத்து, இது தொடர்பாக ஸ்டாலினின் பதில் குறித்து பேசிய இபிஎஸ், நான் என் கடமையைத் தான் செய்கிறேன் என்றும் ஆனால், ஆளுங்கட்சியின் முதல்வர் அதற்கு உரிய பதில்களை அளிப்பதில்லை என்றும் கூறினார். இந்த நிலையில், ஆளும்கட்சி – எதிர்கட்சி ஆகியவற்றின் முரண்பாடு குறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: ‘கடலூரில் கொஞ்சம் பாதிப்பு”.. சாத்தனூர் அணை ஏன் திறக்கப்பட்டது? அன்புமணி கேள்வியும், அமைச்சரின் பதிலும்!
அதற்கு, “எந்தப் பொருளில் அந்த கருத்தை அவர் (ஸ்டாலின்) சொன்னார் என்று நான் கவனிக்கவில்லை. எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கும், அவர்களது கேள்விகளுக்கும் விடை அளிப்பது ஆளும் தரப்பின் கடன் என்பதை அனைவரும் அறிவோம். அது அவர்களுக்கு (திமுக – அதிமுக) இடையிலான அரசியல்” என திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக எம்பி திருமாவளவன் பதிலளித்தார்.