“நாங்கள் விலகியிருக்கிறோம்”.. மீண்டும் அரசியல் அக்கணம் வைத்த திருமாவளவன்!
Author: Hariharasudhan6 December 2024, 12:43 pm
நாங்கள் விலகி இருக்கிறோம், ஒதுங்கி இருக்கிறோம், ஒரே மேடையில் பங்கேற்றாள் அரசியல் சாயம் பூசுவார்கள் என திருமாவளவன் கூறியுள்ளார்.
அரியலூர்: ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை தனியார் மாத இதழ் தனது பதிப்பகத்தின் மூலம் இன்று வெளியிடுகிறது. இந்த நிகழ்வில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பங்கேற்று நூலை வெளியிடுகிறார். இதனை ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு பெற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா கலந்து கொள்கிறார்.
முன்னதாக, இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியானது. இதனால் அரசியல் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. காரணம், விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நிலையில், அதிகாரப் பகிர்வு குறித்து பேசிய வீடியோ வைரலாகி, அது திமுக கூட்டணியில் சலசலப்பையும் ஏற்படுத்தி இருந்தது. ஆனால், நாங்கள் கூட்டணியில் இணக்கமாகத்தான் இருக்கிறோம் என திருமாவளவனே விளக்கி இருந்தார்.
அதேநேரம், தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்திய விஜய், தம்மோடு வருபவர்களுக்கு அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என கூறியிருந்தார். இது திருமாவளவனுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு என அரசியல் விமர்சகர்கள் கருதினர். இந்தச் சூழ்நிலையில் தான் விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் உடன் ஒரே மேடையில் சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இறுதியாக, அதிகாரப்பூர்வமான அழைப்பிதழில், ஆதவ் அர்ஜுனா பங்கேற்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த திருமாவளவன், தன்னை வைத்து அரசியல் எதிரிகள் காய்களை நடத்தப் பார்க்கின்றனர் என கூறியிருந்தார். இந்த நிலையில், அரியலூரில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த திருமாவளவன், “தவெக தலைவர் விஜயும், நானும் ஒரே மேடையில் நின்றால் நிச்சயம் அரசியல் சாயம் பூசுவார்கள்.
இதையும் படிங்க: 6 பொணத்த காணோம்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. என்ன நடந்தது?
தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கான நேரம் வரும் என சிலர் காத்திருக்கின்றனர். எனவே, அதற்கான வாய்ப்பை கொள்கைப் பகைவர்களுக்கு தந்துவிடக் கூடாது என்பதற்காக விலகியிருக்கிறோம், ஒதுங்கியிருக்கிறோம். விஜய்க்கும், எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை, எந்த முரண்பாடும் இல்லை. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் சாயம் பூசியதால் சிக்கல் எழுந்தது” எனக் கூறியுள்ளார்.