இசைவாணி விவகாரம் சில்லறை பிரச்னை.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு

Author: Hariharasudhan
28 November 2024, 11:59 am

அதானி விவகாரத்தை திசைதிருப்புவதற்கு இசைவாணி விவகாரம் போன்ற சில்லறை பிரச்னைகளை கையில் எடுத்து உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை: சென்னையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், பாடகி இசைவாணி இந்து மதத்தை அவமரியாதை செய்யும் விதமாக பாடல் பாடி உள்ளதாக இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது மட்டுமல்லாமல், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த திருமாவளவன், “மதம் அல்லது மத உணர்வைக் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாடப்பட்ட பாடல் அதுவல்ல. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழையக்கூடாது என்ற சர்ச்சை எழுந்தபோது, ஒரு பெண்ணிய குரலாக, பெரியாரின் குரலாக இது இசையாக வெளிவந்துள்ளதே தவிர, யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்துவதாக இல்லை.

அதானி போன்ற பிரச்னைகளை தமிழ்நாட்டில் திசைத் திருப்ப வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இதை பெரிதுப்படுத்துகின்றனர். அதானி கைது செய்யப்பட வேண்டும் என்பது இப்போது தேசிய அளவில் மிகப்பெரும் கோரிக்கையாக உருமாறி இருக்கிறது.

Thirumavalavan on Adani issue

அதை திசைதிருப்புவதற்கு இந்த சில்லறை பிரச்னைகளை கையில் எடுக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். எனவே, அது ஏற்புடையது அல்ல. இசைவாணியைக் கைது செய்ய வேண்டும் என்று சொல்வது பொருத்தமானதும் அல்ல, அது கண்டனத்துக்கு உரியது” எனப் பதில் அளித்தார்.

முன்னதாக, இசைவாணியின் குரலில், “ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயங்காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா.. நான் தாடிக்காரன் பேத்தி.. இப்போ காலம் மாறிப்போச்சி” என பாடல் வெளியானது. இது ஐயப்ப பக்தர்களையும், அவர்களது, மரபு மற்றும் நம்பிக்கையை இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதையும் படிங்க: காவி உடையா? அப்போ நான் யார்? – அரசியல் யூகங்களுக்கு சீமான் பதில்!

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில், இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் மீது நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், எச்.ராஜாவும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

  • delhi high court ordered ar rahman to settle compensation for 2 crores ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?
  • Close menu