நம்முடன் தான் இருக்கிறார்.. எந்த அழுத்தமும் இல்லை.. விஜயின் பேச்சும்.. திருமா பதிலும்!
Author: Hariharasudhan7 December 2024, 9:52 am
தனக்கு பிரஷர் ஏதும் கூட்டணியில் கொடுக்கப்படவில்லை என விஜயின் பேச்சுக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
சென்னை: தனியார் பதிப்பகம் சார்பில், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று (டிச.06) மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புத்தகத்தை வெளியிட்டு மேடையில் பேசினார்.
அப்போது அவர், “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனால் இன்று வரமுடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளால் அவருக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை யூகிக்க முடிந்தாலும், அவரின் மனது இன்று முழுக்க முழுக்க நம்முடன் தான் இருக்கும்” என்றார்.
விஜயின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. முக்கியமாக, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, இந்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ள இருந்ததும், அது முடியாமல் போனது குறித்தும் திருமாவளவனே நேற்று விளக்கம் அளித்து இருந்தார்.
ஆனால், இந்த நிலையில் விஜயின் பேச்சு அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனிடம் விளக்கம் கேட்கப்படும்.
இதையும் படிங்க: பட வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் சிம்பு..நடிப்பை ஓரம் தள்ளி விட்டு என்ன செய்கிறார் தெரியுமா…!
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்பதை நான் சுதந்திரமாகத் தான் முடுவெடுத்தேன். உலகம் முழுவதும் தற்போது மக்களாட்சி தான் நடைபெறுகிறது மன்னராட்சி ஒழிக்கப்பட்டு பல காலங்கள் ஆகின்றது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அம்பேத்கர் நினைவு நாளில் அம்பேத்கர் தொடர்பான நூலை வெளியிட்டு இருப்பதும், அம்பேத்கர் பற்றி பேசி இருப்பதும் பெருமை அளிக்கிறது. பொது நீரோட்டத்தில் அம்பேத்கர் வெகுவாக பேசப்படுகிறார். அந்த வரிசையில், விஜய்யும் எல்லோருக்குமான தலைவர் என்ற நூலை வெளியிட்டிருப்பது பாராட்டுக்குறியது.
திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். அதில் எனக்கு உடன்பாடில்லை, அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி உள்ளேன். அழுத்தம் கொடுத்து அதற்கிணங்கக் கூடிய அளவுக்கு நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை.
இந்த நிகழ்வில் நான் பங்கேற்காமல் போனதற்கு விஜய் காரணம் இல்லை. அவருக்கும். எங்களுக்கும் எந்தவிதமான சிக்கலும் இல்லை. ஆனால். எங்கள் இருவரையும் வைத்து விஜய் – திருமா ஆகியோர் மேடையில் ஏறப் போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிகழ்வை அரசியல் சாயம் பூசி உள்ளனர்.
நான் சுதந்திரமாக எடுத்த முடிவு விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு எந்த பாதகமும் ஏற்படாத வகையில் எடுத்த முடிவு. இதில் எந்த பிரஷரும் இல்லை. விஜய் சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுதந்திரம் இருக்கிறது, அதன்படி அவர் கூறியுள்ளார்” என்றார்.