‘கோட்பாடு இல்லாத தலைவர்கள்’.. சுட்டிக்காட்டிய திருமாவளவன்!! அதிரும் அரசியல்!
Author: Hariharasudhan23 December 2024, 11:17 am
தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் உருவாக்குவார்கள் என்ற வசனத்தை, விடுதலை 2 படத்தைப் பார்த்துவிட்டு திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி உள்ள விடுதலை 2 படத்தை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் நேற்று பார்த்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மகத்தான படைப்பாக விடுதலை 2 படம் வெளிவந்துள்ளது.
வெற்றிமாறன் இதுவரை இயக்கியுள்ள அனைத்துப் படங்களுமே மக்கள் செல்வாக்கோடு மாபெரும் வெற்றியைப் பெற்று இருக்கிறது. அந்த வகையில், இதுவும் ஒரு வெற்றிகரமான திரைப்படம். அதேநேரம், இந்தப் படம் பேசியிருக்கக்கூடிய அரசியல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டு தேர்தல் களத்தில் பங்கேற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசும் அரசியல், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மறுத்து மக்களை அரசியல்படுத்தி, புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும் எனப் பேசுகிற கம்யூனிஸ்ட் அரசியல் இன்னொன்று.
கம்யூனிஸ்ட் கட்சிகளில் இரண்டு வகைகள் உள்ளன. மக்களை அரசியல்படுத்தி, அமைப்பாக்கி போர்க்குணம் மிக்கவர்களாக வளர்த்தெடுக்கக்கூடிய அரசியல் இன்றைக்கு இந்தியாவில் மாவோயிஸ்ட் என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாவது வகை அரசியலை, நுட்பமாகப் பேசுகிற, விவாதிக்கிற களமாகத்தான் விடுதலை 2 அமைந்துள்ளது.
தமிழ் சூழலுக்கு ஏற்ப தமிழ்த்தேசிய இன விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்த போராளிகளைக் கருப்பொருளாக கொண்டு இந்த திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் உருவாக்குவார்கள், போராளிகளை உருவாக்க முடியாது என ‘விடுதலை 2’ திரைப்படத்தில் இடம் பெற்ற வாசகம் தற்போதைய சூழலுக்குப் பொருத்தமாக உள்ளது. இதனை நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை” என அவர் கூறினார்.
இதையும் படிங்க: இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் விடுதலை 2. இப்படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதேநேரம், பல தீர்க்கமான அரசியல் விமர்சனங்களையும் இப்படம் எதிர்கொண்டு வருகிறது.