யார் அந்த சார்? திமுகவை நோக்கி திருமாவளவன் கேள்வி.. பரபரக்கும் அரசியல் களம்!
Author: Hariharasudhan2 January 2025, 1:08 pm
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் யார் அந்த சார்? என்பது தொடர்பாக நேர்மையான விசாரணை தேவை என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை விமான நிலையத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ,அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் யார் அந்த சார்? என்பது தொடர்பாக நேர்மையான விசாரணை தேவை. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அவ்வப்போது நடக்கும் சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவ்வப்போது தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளோம், வேண்டுகோள் விடுத்து இருக்கிறோம்.
அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட, அந்த குற்றச்செயல் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் உருவாக்கி இருக்கிறது.
பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்த வழக்கைப் பொறுத்தவரையில் கைது செய்யப்பட்ட நபரைத் தாண்டி, ஒரு சிலர் அதில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.
இதையும் படிங்க: ஆள விடுங்கடா சாமி…பொங்கல் ரேஸில் இருந்து ஓட்டம் பிடித்த வீர தீர சூரன்..!
எனவே, அரசு, குறிப்பாக காவல்துறை நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்கக் கூடாது. அவரைச் சிறையில் வைத்தே புலன் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு விசாரணை முடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்தார்.