விஜய் ’அதை’ உணர்ந்துவிட்டாரா? திருமாவளவன் தடால் கேள்வி.. பரபரப்பில் தவெக!
Author: Hariharasudhan11 January 2025, 5:57 pm
நீட் தேர்வு ரத்துக்கு தடையாக இருப்பது மத்திய அரசு தான் என்பதை விஜய் உணர்ந்துள்ளாரா என்பது தெரியவில்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், 2021 தேர்தலில் அளித்த வாக்குறுதி என்ன ஆச்சு? நீட் தேர்வு ரகசியம் என்ன? என எதிர்கட்சியான அதிமுக, கேள்விகளால் துளைத்தெடுத்தது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன.
தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது.
மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது. ஆனால், தான்தோன்றித்தனமாகவே இது போன்ற நிலைப்பாடுகளை எடுத்து மாநில அரசுகளைப் புறந்தள்ளி வருகிறது.
இதையும் படிங்க: அங்க போவாராம்.. அவுங்கள பார்ப்பாராம்.. ஆனா திமுக இல்லையாம்.. இபிஎஸ் கடும் விளாசல்!
தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை அகற்ற நடவடிக்கை எடுப்போம் என்றனர். சொன்னபடி, சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி அனுப்பியும், மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யும் முயற்சியில், திமுக தன் கடமையைச் செய்துள்ளது.
நீட் தேர்வு ரத்துக்கு தடையாக இருப்பது மத்திய அரசு தான் என்பதை தவெக தலைவர் விஜய் உணர்ந்துள்ளாரா என்பது தெரியவில்லை. மத்திய அரசைக் கேள்வி கேட்பதுதான் முறை” எனத் தெரிவித்துள்ளார். விஜய், கட்சி தொடங்கியது முதலே தவெக – விசிக இடையே குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், விஜயை நேரடியாக திருமாவளவன் கேள்வி கேட்டிருப்பது அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.