‘காந்திகூட இந்தப் போராட்டத்தை எடுத்திருக்க மாட்டார்’.. திருமாவளவனால் அதிரும் திமுக!
Author: Hariharasudhan26 December 2024, 6:50 pm
தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தைக் கையில் எடுத்திருக்கும் அண்ணாமலையின் செயல்பாடு வருத்தம் அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: கோவை விமான நிலையத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (டிச.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரியது.
இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டது சற்று ஆறுதல் அளிக்கிறது. அந்தக் குற்றச் செயலில் தொடர்புடையவர்கள் வேறு யார் இருந்தாலும், அனைவருமே கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உடனடியாக ஜாமீன் வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, சிறைக்குள் வைத்திருந்தே விசாரணை நடத்த வேண்டும்.
உரிய தண்டனையை உரிய காலத்தில் பெற்றுத்தர வேண்டும் என அரசை வலியுறுத்துகிறோம். அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக அல்ல, பாஜக தான் எதிர்கட்சி என்று காட்ட அண்ணாமலை பெரிதும் முயற்சிக்கிறார்.
ஆகவே, ஆளுங்கட்சி மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகளை அடுக்கினால் தான் ஒரு எதிர்கட்சியாக செயல்பட முடியும், எதிர்கட்சித் தலைவராக காட்டிக் கொள்ள முடியும் என அவர் நம்புவதாகவேத் தெரிகிறது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன், அரசியல் கட்சித் தலைவர்களோடு புகைப்படம் எடுத்திருக்கிறார்.
அதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் எனச் சொல்வது அப்பட்டமான ஒரு அரசியல், ஆதாய அரசியல். அவர் கைது செய்யப்படாமல் இருந்தால், ஒரு வேளை இந்தக் காரணத்தினால் தான் கைது செய்யவில்லை என குற்றம் சாட்டலாம். ஆனால், உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அரசின் மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையது அல்ல.
லண்டன் சென்றுவிட்டு வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை. சாட்டையால் அடிக்கும் போராட்டம் என்ற முடிவை எடுப்பது வருத்தம் அளிக்கிறது. தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் அகிம்சை வழிப்போராட்டத்தை காந்தி போல கையில் எடுக்கிறாரா எனத் தெரியவில்லை.
காந்தி கூட இந்த வகை போராட்டத்தை அறிவிக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் சரி, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கெள்வது அதிர்ச்சியாக இருக்கிறது. அவரது போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது.
இதையும் படிங்க: புகாரளித்த அன்றே 2 முறை பிடிபட்ட ஞானசேகரன்.. வீட்டில் கிடந்த தொப்பி.. வெளிவந்த திடுக் தகவல்கள்!
அதேநேரம், மாணவியின் விவரங்கள் வெளியாகி இருக்கக்கூடாது. அவ்வாறு வெளியானது ஏற்புடையதும் அல்ல. அது கண்டனத்திற்க்குரியது. காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்ஐஆர் வெளியிட்டதற்கு போலீஸ் அதிகாரி பொறுப்பேற்க வேண்டும்.
நாங்கள் யாரையும் மிரட்டுகின்ற நிலையில் இல்லை. எங்களை யாரும் மிரட்டுகின்ற நிலையிலும் நாங்களும் இல்லை” எனத் தெரிவித்தார். முன்னதாக, திமுக ஆட்சியில் இருந்து இறங்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்றும், நாளை காலை 6 சாட்டையடிக்கும் போராட்டத்தைக் கையிலெடுப்பேன் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.