சசிகலா உறவினரின் தனியார் கிளப்பை திறந்து வைத்த திருமாவளவன்.. எழுந்த சர்ச்சை.. விசிக விளக்கம்?
Author: Hariharasudhan9 December 2024, 1:27 pm
தனியார் கிளப்பை திருமாவளவன் திறந்து வைத்த நிலையில், மது ஒழிப்பு மாநாடு நடத்திவிட்டு கிளப் திறந்து வைக்கலாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சென்னை: சென்னை அடுத்த புழல் பகுதியில் உள்ள தனியார் கிளப் ஒன்றை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கடந்த டிசம்பர் 7ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த கிளப், வி.கே.சசிகலாவின் உறவினர் பாஸ்கரனுக்குச் சொந்தமானதாக கூறப்படுகிறது.
இந்த கிளப்பில், நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம், பார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இதனை J club-ன் இணையதளப் பக்கத்தில், அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்பவை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, பெரிய நிகழ்ச்சிகளுக்கான அரங்கு, ரெஸ்டோபார் போன்ற வசதிகளுடன் இந்த கிளப்பை 2022ஆம் ஆண்டு பாஸ்கரன் தொடங்கி இருக்கிறார் பாஸ்கரன்.
மேலும், இந்த டிசம்பரில் தான் அந்த கிளப்பில் மேலும் சில வசதிகளை இணைத்து உள்ளனர். அது மட்டுமல்லாமல், உணவகம், காஃபி ஷாப், பேட்மின்டன் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக அரங்குகள் போன்ற வசதிகளை தற்போது தொடங்கி உள்ளனர். எனவே, திருமாவளவன் தொடங்கி வைத்தது இந்த வசதிகளைத்தான் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விசிக பொதுச் செயலாளர் வன்னியரசு, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “நேற்று டிசம்பர் 7ஆம் தேதி மாலை புழல் அருகே ‘ஜே கிளப் ’ நிறுவனத்தின் சைவ உணவகம், நீச்சல் குளம், பேட்மின்டன் விளையாட்டரங்கம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டரங்கம் ஆகியவற்றை விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: ‘கட்சிக்குள்ளேயே எதிர்மறை தாக்கம்’.. ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்.. திருமாவின் காரணம்!
‘J club’ நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கரன் அவர்கள், திருமாவளவன் மீதான பேரன்பினால் அந்நிகழ்வுக்கு அழைத்திருந்தார். அவரது அழைப்பையேற்றுத் திருமாவளவன் பங்கேற்றார். ஆனால், அங்கே ‘மது பாரினைத்’ திறந்து வைத்ததாக அவதூறு பரப்புகின்றனர். இப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.