இந்தி வாலாக்களாக மாற்ற முயற்சி.. திருமாவளவன் கடும் விமர்சனம்!
Author: Hariharasudhan25 February 2025, 2:14 pm
இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தித் திணிப்பு என்பது ஒரு திட்டமிட்ட ஒரு அரசியல் நடவடிக்கை. இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது.
வடக்கே ஒரு சில மாநிலங்களில் மட்டும்தான் இந்தி பேசப்பட்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், இந்தி தேசிய மொழியாக, அலுவல் மொழியாக மாற வேண்டும் என்பதே இந்தி பேசக்கூடியவர்களின் விருப்பமாகவும், செயல்திட்டமாகவும் உள்ளது.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளை அவர்கள் பிராந்திய மொழிகள் எனச் சொல்கிறார்கள், ஆனால் இந்தியும் ஒரு பிராந்திய மொழிதான் என்பதை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள். இந்தி மொழியைப் பிற மொழி பேசும் மக்கள் மீது திணிப்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானது.
மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமில்லை என்று மத்திய கல்வியமைச்சர் தற்போது விளக்கமளித்துள்ளார். ஆனால், நடைமுறையில் மூன்றாவது மொழி இந்திதான் என மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் இருக்கிறது. மாநில அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் அதனைச் செயல்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்.
இப்போது பிஎம் ஸ்ரீ என்ற பள்ளிகளை மத்திய அரசு நிறுவுகிறது. அந்தப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை நடைமுறையில் இருக்கிறது. மத்திய அரசு தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் அதனுடன் சேர்ந்து ஏதாவது இந்திய மொழி ஒன்றைக் கற்க வேண்டும் எனக் கூறுகிறது.
அப்படி இருக்குமாயின், இந்தி பேசக்கூடியவர்கள் எந்த பிராந்திய மொழியை மூன்றாவது மொழியாகக் கற்கின்றனர் என்று மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்கள், இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளை மட்டுமே கற்கின்றனர், பேசுகின்றனர்.
ஆனால் பிறமொழி பேசக்கூடிய மக்கள், தாய் மொழி மற்றும் ஆங்கில மொழியுடன் சேர்ந்து இந்தியைக் கற்க வேண்டும் என்ற முயற்சியை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, பாஜக அரசு ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்பதைப் போல ‘ஒரே தேசம், ஒரே மொழி’ என்ற நிலையை உருவாக்க முயல்கிறது.
இதையும் படிங்க: திமுக ‘இந்த’ தோற்றத்தை உருவாக்குகிறது.. தமிழிசை கடும் சாடல்!
இந்தியாவின் உள்ள ஏதோ ஒரு மொழியோ அல்லது அயல்நாட்டு மொழியோ கூட மூன்றாவது மொழியாகப் படிப்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அது தனிநபரின் விருப்பம். ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் ஒரு கொள்கை நிலைப்பாட்டை வைத்து, இந்தி அல்லாது பிற மொழி பேசும் மக்களின் மீது திணித்து, இந்தி பேசு இந்தி வாலாக்களாக மாற்றுவதுதான் அவர்களின் நோக்கம்.
அதைத்தான் நாம் தொடர்ந்து எதிர்க்கிறோம். ஆனால், அவர்களின் பிடிவாதத்தில் இருந்து மாறவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்திக்கு அல்ல இந்தி திணிப்புக்கு ஒரு போது இடமிருக்காது என்று மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.