பதவியை ராஜினாமா செய்து விட்டு முழுநேரமாக RSS பணியை செய்யலாம் : ஆளுநருக்கு திருமாவளவன் அட்வைஸ்..!!
Author: Babu Lakshmanan18 June 2022, 6:06 pm
ஆளுநர் ஆர்.என் ரவி பதவியிலிருந்து விலகி விட்டு முழுநேர ஆர்எஸ்எஸ் வேலையை செய்ய தகுதி உடையவராக இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தியாகி கக்கனின் 114வது பிறந்த தினத்தையொட்டி, மேலூர் அருகே தும்பை பட்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மணி மண்டபத்தில் அவரது நினைவு புகைப்படங்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :- அரசியலில் காமராஜரைப் போல் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து காட்டியவர் தியாகி கக்கன். அவர் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றார். தற்போது அவரது மணிமண்டபம் பல இடங்களில் சிதலமடைந்தும், புகைப்படங்கள் பாதுகாக்கப்படாமலும் உள்ளது. அவரது மணிமண்டபத்தை புதுப்பிக்க முதல்வர் ஸ்டாலினிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முன் வைக்கப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என எல்லாவற்றையும் ஒருமைப்படுத்த பாஜக முயல்கிறது. இது நாட்டின் பண்மையையும், அரசியல் சட்ட திட்டத்தையும், ஜனநாயகத்தின் ஒற்றுமையையும் சிதைப்பதற்கு வழிவகுக்கும் அடித்தளமாகும். இதனை கண்டித்து அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.
அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்களை 4 ஆண்டுகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு எதிராக தற்போது பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் இந்து சமூகத்தினரால் முன்னெடுக்கப்படுகிறது. இதன்மூலம் இந்த அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்பதை காட்டுகிறது. இந்துக்களை மோடி ஏமாற்றுகிறார். இந்த அக்னிபாத் திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்தப்படுகிறது.
ஆளுநர் ரவி, ஆர்எஸ்எஸ் ரவி ஆக செயல்படுகிறார். அவர் சனாதன கொள்கைகளை பரப்புகிறார். ஆளுநர் தனது பதவியில் இருந்து விலகிவிட்டு. முழுநேர ஆர்எஸ்எஸ் வேலையை செய்ய தகுதி உடையவராக உள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக, இதுவரை முஸ்லிம் மற்றும் பட்டியல் இனத்தவர் என பலர் இருந்துள்ள நிலையில், இதுவரை ஒரு கிருஸ்தவர் கூட ஜனாதிபதியாக ஆகவில்லை. ஜனாதிபதி வேட்பாளராக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஒருவரை முன்மொழிய வேண்டும். என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து தவறான கருத்துக்களை பதிவு செய்த நுபுர் சர்மா போன்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும். போராடுவது வீடுகளை குறிவைத்து புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டம் ஆக்குவதே விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது, என அப்போது தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தும்பைபட்டியை சேர்ந்த சந்தான பிரபு மற்றும் பவானி தம்பதியரின் பெண் குழந்தைக்கு “தூயமணி” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பெயர் சூட்டி அழைத்தார்.