சினிமாவில் காலாவதியானதால் அரசியல் வருகை.. விஜயை கடுமையாக விமர்சித்த திருமா!
Author: Hariharasudhan27 February 2025, 9:44 am
சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள் என விஜயை திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்த பூமிநத்தம் பகுதியில், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பட்டாசு தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், திருமலா, திருமஞ்சி, செண்பகம் ஆகிய மூன்று பெண்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இதனையடுத்து, இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “35 ஆண்டுகால உழைப்பால், மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியிருக்கிறோம். சிலர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்துவிட்டு, பணத்தை தேடி, சுகத்தை தேடி, சொத்தைச் சேர்த்து, இளமை காலத்தை எல்லாம் சொகுசாக வாழ்ந்து, சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள்.
சினிமாவின் மூலம் நன்கு சம்பாதித்துவிட்டு, வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு அரசியலுக்கு வருகிறார்கள். அவர்கள் இதுபோன்று ஊர் ஊராகச் சென்று பேசத் தேவையில்லை. உடனே கட்சி தொடங்கலாம், ஆட்சி அதிகாரத்தையும் பெறலாம். ஆனால், நான் கடந்த 35 ஆண்டுகளாக வாழ்க்கையை முழுமையாகத் துறந்து, தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல், சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல், எனது இளமை முழுவதையும் இழந்துதான் இந்த இடத்தை எட்டிப் பிடிக்க முடிந்தது.
மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, இவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்துதான், வாழ்க்கையைத் துறந்துதான் இந்த இடத்தை எட்டிப் பிடிக்க முடிந்தது. அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்ற தலைவர்களின் கொள்கைப் பிடிப்பு எனக்கு இருக்கிறது.
கொள்கையில் தெளிவு இருப்பதால், எந்தக் கொம்பனாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது. நான் ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்திருந்தால், என்றோ இந்தக் கட்சிக்கு அங்கீகாரம் பெற்றிருக்கும். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது.
இதையும் படிங்க: 13 வருடங்களுக்குப் பிறகு மாஸ் காம்போவுடன் இணையும் விஜய் சேதுபதி!
இதை நான் கர்வத்தோடு கூறவில்லை. இது காலத்தின் கட்டளை. இதை அரசியல் வல்லுநர்களே ஆராய்ந்துச் சொல்லி இருக்கிறார்கள்” என்றார். முன்னதாக, விஜய் தவெக மாநாட்டில், கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆட்சியிலும் பங்கு என்ற வாதத்தை முன்வைத்தார்.
அப்போது, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை, திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் மேடையில் கூறிய வீடியோ வைரலானது. எனவே, விசிக, தவெக கூட்டணி அமையும் என பேசப்பட்ட நிலையில், அடுத்தடுத்து நிலைமை தலைகீழாகச் சென்று கொண்டிருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.