மகன்கள் விபத்துக்குள்ளான அதே இடத்தில் தந்தைக்கும் விபத்து… அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan6 July 2022, 8:10 pm
திருப்பூர் – பல்லடம் அருகே ராயர்பாளைத்தில் விபத்தில் காயமடைந்த மகன்களை பார்க்க சென்ற தந்தையும், அதே இடத்தில் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த சகோதரர்கள் அருண்குமார்- சசிகுமார். இவர்களிருவரும் இரு சக்கர வாகனத்தில், இன்று காலை திருப்பூரிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது, சகோதரர்கள் வந்த இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இத்தகவல் சகோதரர்களின் தந்தை பெத்தானுக்கு தெரிய வந்து, அவரும் இரு சக்கர வாகனத்தில் திருப்பூரிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்த போது, அவரது மகன்களின் வாகனம் விபத்துக்குள்ளான ராயர்பாளையத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி, சாலையோரம் இருந்த குழி ஒன்றில் அவரது இரு சக்கர வாகனமும் இறங்கி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதே பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக இதே இடத்தில் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சாலையோர குழியை சரி செய்ய பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. விபத்திற்குள்ளான பெத்தான் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.