‘யாருக்காக வேலை செய்யறீங்க’…? மனுவை வாங்க மறுத்த அரசு அதிகாரி ; வெளியே போகச் சொன்னதால் மனுவை கிழித்து விவசாயிகள் எதிர்ப்பு..!!
Author: Babu Lakshmanan3 August 2022, 7:18 pm
கல்குவாரி குறித்து மனு அளிக்கச் சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி, அலுவலகத்தை விட்டு வெளியே போகுமாறு சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் இச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் 34 கல் குவாரிகள் இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழக்கூடிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு மட்டுமல்லாது, கல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக அபாயகரமான வெடிப்பொருட்கள் வெடிக்க செய்வதால், அதிலிருந்து வரும் புகை மற்றும் அதிபயங்கர ஒலியால் அருகில் குடியிருக்கும் குடும்பங்களும், கால்நடைகளும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், கல்குவாரிகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையால் நிலத்தடி நீர் மட்டுமல்லாது, அப்பகுதி நீர்நிலைகளும் மாசுபட்டு விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர்.
எனவே, கல்குவாரிகள் மீது சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கோடங்கிபாளையம் இச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க சென்றனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிமவளத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்க சென்றபோது, மாவட்ட கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் வள்ளலிடம் மனு அளிக்க முயன்ற போது, விவசாயிகள் மற்றும் இணை இயக்குனருடைய வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அடுத்து மனுவை வாங்க மறுத்த இணை இயக்குனர், விவசாயிகளை புறக்கணித்து அலுவலகத்திலிருந்து வெளியேற முயன்றார். அப்போது, விவசாயிகளை வெளியேறுமாறு கூறி, அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மனுவை வாங்க மறுத்த அரசு அதிகாரியை கண்டிக்கும் வகையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் சமரச பேச்சுக்கு பின்பு மீண்டும் மனு அளிக்க சென்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களை இணை இயக்குனர் அவமதித்ததாக கூறி வெளியே வந்த விவசாயிகள், மனு நகலை கிழித்தெறிந்து கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளை சாபம் இட்டவாறு சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.