ஓசி பிரியாணி தர மறுத்த ஓட்டல் உரிமையாளர்… பொருட்களை சூறையாடிய 4 பேர் கொண்ட கும்பல்… வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வலுக்கும் கோரிக்கை…!!

Author: Babu Lakshmanan
9 April 2022, 5:28 pm

பொன்னேரி அருகே தனியார் உணவகத்தில் ஓசி பிரியாணி கேட்டு தர மறுத்ததால், உணவகத்தை சூறையாடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் பிரவீன் என்பவர் தனியார் விரைவு உணவகம் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இவரது கடைக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஓசி பிரியாணி கேட்ட போது ஏற்பட்ட தகராறில் ஹோட்டல் உரிமையாளர் பிரவீன் என்பவரை தாக்கியதுடன் கடைகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி விட்டு சென்றது.

இதுகுறித்து அவர் உடனடியாக பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தும், காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் இல்லாததால் அவர்கள் வர தாமதம் ஆனது.

4 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர் பிரவீன் பொன்னேரி காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் நடைபெறும் போது அவர்கள் தாக்கியதையும், கடையை சேதப்படுத்தும் காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது பரவி வருகிறது.

வியாபாரிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும், இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தாலும், போதிய காவலர் பணியில் இல்லாததால் ஓட்டல் உரிமையாளரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய முடியாத நிலை உள்ளது.

வியாபாரிகளை பாதுகாக்கும் விதமாக காவல்துறை உதவிட வேண்டும் எனவும், கூடுதல் காவலர்களை பொன்னேரி காவல் நிலையத்தில் நியமிக்க வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!