விஷவாயு தாக்கி இரு கூலித்தொழிலாளிகள் பலி ; பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது நிகழ்ந்த சோகம்..

Author: Babu Lakshmanan
15 May 2023, 2:21 pm

திருவள்ளூர் அருகே புழலில் விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி இருவர் பலியாகினர்.

புழல் அடுத்த காவாங்கரை குருசாந்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நிர்மலா (49). இவரது கணவர் உடல் நிலை சரியில்லாமல் சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு சொந்தமான இரண்டு அடுக்கு மாடி வீட்டில் இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டில் உள்ள பாதாள சாக்கடைக்கு செல்லும் கழிவுநீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டதால், இவருக்கு தெரிந்த அதே பகுதியில் வசிக்கும் கணேசன் (65) என்பவரிடம் இதனை சரிசெய்ய கூறியுள்ளார். அவர் பாடியநல்லூர் மொன்டியம்மன் நகர் மேட்டு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (40), அவருடைய நண்பர் இஸ்மாயில் (45) ஆகிய இருவரும் வீட்டில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்து அழைத்துச் சென்றுள்ளார்.

சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென அதிலிருந்து விஷவாயு கிளம்பியதில், இருவரையும் தாக்கி மேல் எழும்பி, வராமல் உள்ளேயே மூச்சு திணறி உயிருக்கு போராடினார்கள். பின்னர், இத்தகவல் புழல் காவல் நிலையத்திற்கு தெரியவந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையிலான வீரர்கள் அபினேஷ் தக்க சுவாச கருவிகளுடன் தாமதிக்காமல் சாக்கடையில் இறங்கி, அவர்களை தேடியதில் அவர்கள் இருவரையும் பிணமாக மீட்டனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் சக்திவேல் மற்றும் புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இறந்த இஸ்மாயிலுக்கு லத்தீபா என்ற மனைவியும், 9 வயதில் பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு ஆண் மகனும் உள்ளனர். அதேபோல், பாஸ்கர் என்பவருக்கு வசந்தி என்ற மனைவியும், சேகர் என்ற மகனும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!