சென்னை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28 கிலோ கஞ்சா : பறிமுதல் செய்து போலீசார் விசாரணை..!!
Author: Babu Lakshmanan27 August 2022, 9:24 am
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28கிலோ கஞ்சா பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லை வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக ஆந்திர எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தொடர்ந்து பேருந்துகளில் சோதனை செய்து கடந்த ஏழு நாட்களில் மட்டும் சுமார் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கேட்பாரற்று கிடந்த 11 கஞ்சா பொட்டலங்களையும், மூன்று பாலிதீன் கவர்களில் வைக்கப்பட்டிருந்த 28 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் போலீசாரின் சோதனையை கண்ட கஞ்சா கடத்தல் கும்பல் தப்பித்துச் சென்றதால், கடத்தல் கும்பலை கைது செய்ய முடியவில்லை எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.