தனியார் பள்ளிக்கு தொடர்ந்து 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் ; இன்றும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!!
Author: Babu Lakshmanan14 September 2022, 11:29 am
திருவள்ளூர் ; திருவள்ளூரில் தனியார் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, இரண்டாவது நாளாக மூன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வேலம்மாள் இன்டர்நேஷனல் உள்ளிட்ட மூன்று பள்ளிகளுக்கும் மீண்டும் இன்றும் விடுமுறை அளித்துள்ளனர். நேற்று குறுஞ்செய்தி மூலம் பள்ளி நிர்வாகி துணை பிரின்சிபால் திலக் என்பவருக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது.
இதைத்தொடர்ந்து, உடனடியாக 3 பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மருதம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்வு மோப்பநாய் உள்ளிட்டவைகளுடன் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
போலீசார் வெடிகுண்டு புரளியென சோதனையில் தெரிவித்துவிட்டு சென்ற நிலையில், இன்று மீண்டும் யுஎஸ்ஏ செல்போனின் அதே எண்ணில் இருந்து வந்த குறுஞ்செய்தி வெடிகுண்டு, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், இன்றும் இரண்டாவது நாளாக மூன்று பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, பள்ளியில் மீண்டும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், இருபதுக்கும் மேற்பட்ட கவரப்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் இன்று இரண்டாவது நாளாக தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி விடுதியில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகிகள் ஊழியர்கள் உள்ளிட்டவர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளனர். சுமார் 25 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட பள்ளி வளாகத்தில் உண்மையாகவே வெடிகுண்டு உள்ளதா..? அல்லது மீண்டும் போலி மிரட்டலா..? என்பது தெரியாமல் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0
0