பாம்பு கடித்து உயிரிழந்த 8 வயது சிறுமியின் இறப்பில் திடீர் திருப்பம்… 75 வயது முதியவர் உள்பட 7 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
26 July 2022, 9:36 pm

திருவள்ளூர் : சோழவரம் அருகே பாம்பு கடித்து இறந்த 8 வயது சிறுமியின் மறைவுக்கு பிறகு, பிரேத பரிசோதனையின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஆவடி காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட புதிய எருமை வெட்டி பாளையத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி பாம்பு கடித்துவிட்டதாக கூறி கடந்த 24ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிறிது நேரத்தில் சிறுமி உயிரிழந்த நிலையில் இதுகுறித்து சோழாவரம் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்ததில் பாம்பு கடித்து உயிரிழந்தது உறுதியானது. இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

சிறுமி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சிறுமி தொடர்பான வீடியோ காட்சி ஒன்று அப்பகுதியில் பரவி வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

உயிரிழந்த 8 வயது சிறுமி பாண்டிச்சேரி அருகே தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை இறந்து விடவே, தாய் மற்றும் உறவினர்களுடன் வினோத் என்கிற தனியார் செங்கல் சூளைக்கு சிறுமியின் குடும்பம் குடியேறியது. சிறுமியின் தாய் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். உறவினர்கள் வேலைக்கு சென்ற பிறகு அதே பகுதியில் வசித்து வந்த 75 வயதான பாலு, சிறுமியிடம் பேச்சு கொடுத்து பழகியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார் பாலு. அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான கண்ணன் பாலியல் வன்கொடுமையை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை தனது நண்பர்களாக பாஸ்கர், சதீஷ், ஆகியோருக்கு பகிர்ந்துள்ளார் கண்ணன்.

இதை அறிந்த பாலுவின் மகன், தந்தையை கண்டித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாலு மீண்டும் மகன் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில்தான் சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது பாம்பு கடித்து சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

சிறுமியின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அதன் அறிக்கை வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதோடு சிறுமியின் ஆபாச வீடியோவும், வெளியான தகவல் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.

விசாரணையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாலு மீது போக்சோ பிரிவு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை வீடியோ படம் எடுத்து பகிர்ந்த 6 பேரை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல் சூளை மேனேஜர் ரகு உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய விசாரணைக்கு பின்னரே, சிறுமியை வன்புணர்வு செய்து வீடியோ படம் எடுத்து பரப்பியவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா..? என்ற முழு விவரம் வெளியாகும் என காவல்துறையினர் மற்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

எட்டு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 762

    0

    0