வீடு புகுந்து பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… திமுக பிரமுகரை கைது செய்த போலீஸ் : வெளியானது அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Author: Babu Lakshmanan
31 May 2022, 2:18 pm

திருவள்ளூர் : கூவம் பேருந்து நிலையம் அருகே முன்விரோதம் காரணமாக சார்லஸ் என்பவர் வீட்டில் புகுந்து அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட குடும்பத்தினரை தாக்கிய சம்பவத்தில் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியில் பரிசுத்த மெய் தேவாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த தேவாலயத்தில் பாஸ்டராக உள்ள தாஸ் என்பவருக்கும், கூவம் பேருந்து நிலையம் அருகே உள்ள சார்லஸ் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

பாஸ்டர் தாஸ் தேவாலயத்திற்கு வரும் ஒரு சில பெண்களிடம் தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், தேவாலயத்தின் கணக்கு வழக்குகளை சரிவர காட்டாமல் மறைப்பதாகவும் கூறி, இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதன் காரணமாக பாஸ்டர் தாஸுக்கு ஆதரவாக திமுக கிளை செயலாளர் அன்பு உள்ளிட்ட அடியாட்கள், நேற்று இரவு சார்லஸின் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த சார்லஸ் மற்றும் அவரது மனைவி விக்டோரியா, மகள் சவிதா, மகன் சாருகேஷ் உள்ளிட்டோரை இரும்பு ராடு மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் அவரது மனைவி விக்டோரியா, மகள் சவிதா ஆகியோர் தலையில் பலத்த காயங்களோடு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்தநிலையில், சார்லஸின் வீட்டுக்குள் சுமார் 5க்கும் மேற்பட்ட அடியாட்கள் புகுந்து தாக்கி பொருட்களை அடித்து நோறுக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சார்லஸின் சகோதரர் சத்தியமூர்த்தி மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மப்பேடு காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து பெண்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே, அடியாட்களை அனுப்பி தாக்குதல் நடத்திய திமுக கிளைச் செயலாளர் அன்புவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறையாக உள்ள பாஸ்டர் தாஸ் உள்ளிட்ட 8 பேரை தேடி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 593

    0

    0