அதிகாரிகளின் அலட்சியம்… கோவில் இடுக்கில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்… கண்டுகொள்ளுமா பள்ளி கல்வித்துறை..?
Author: Babu Lakshmanan15 July 2023, 9:30 am
திருவண்ணாமலை ; செங்கம் அருகே பள்ளி கட்டிடம் இல்லாமல் கோவில் இடுக்கில் மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம் ஊராட்சி அண்டபேட்டை பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கட்டிடம் இல்லாததால் கோவில் இடுக்கில் அமர்ந்த படிக்கும் அவலநிலை உருவாகி உள்ளது. மேல்கரியமங்கலம் ஊராட்சி அண்டபேட்டை பகுதியில் 1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 20 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கடந்த கல்வி ஆண்டின் கோடை விடுமுறைக்கு முன்பே அங்கு இயங்கி வந்த அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட பணிகள் நடைபெற்றது. அப்போது, தனிநபர் வீட்டில் மாணவ, மாணவிகளை அமர வைத்து ஆசிரியர் பாடம் நடத்தி வந்தார். இந்த கல்வி ஆண்டில் தனி நபர் வீட்டில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்த இடம் அளிக்கப்படாததால், மரத்தடியிலும் கோவில் சந்து இடுக்கிலும் ஆசிரியர் மாணவர்களை அமர வைத்து பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
தற்போது, நடைபெற்று வரும் புதிய பள்ளி கட்டிடப் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களுக்கு பாதுகாப்பான கட்டிடத்தில் அமர வைத்து பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் முறையிட்டும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இதுவரையிலும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை தற்காலிக கட்டிடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.