பிரசவம் முடிந்து சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி… மருத்துவர்கள் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு… விசாரணை நடத்த உத்தரவு
Author: Babu Lakshmanan14 ஜூன் 2022, 7:15 மணி
திருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்து மூன்று நாட்களே ஆன நிலையில், சிகிச்சையில் இருந்த இளம்பெண் உயிரிழந்தார். அதன் காரணமாக உறவினர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் அருகே தேவர்கண்ட நல்லூரை சேர்ந்தவர் அப்துல் ஜாபர். இவரது மகள் பர்வீன் பானு (23) என்பவருக்கும், கும்பகோணத்தை சேர்ந்த பரக்கத்துல்லா என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் பர்வீன் பானு தனது முதல் பிரசவத்திற்காக தேவர்கண்டநல்லூரில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்திருந்தார்.
கடந்த 7 ஆம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பர்வீன் பானுவுக்கு 11ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்த நிலையில், பர்வீன் பானு தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார். இன்று காலை 7 மணி அளவில் பர்வீன் பானு தனக்கு மயக்கம் வருவதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, உறவினர்கள் உடனடியாக அங்கு பணியில் இருந்த செவிலியரிடம் இது குறித்து கூறி உள்ளனர். அதற்கு செவிலியர் மருத்துவர் இன்னும் வரவில்லை, வந்தவுடன் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பர் அதுவரை பொறுத்திருக்கவும் என்று கூறியுள்ளனர்.
செய்வதறியாது திகைத்த உறவினர்கள் அருகில் உள்ள அறையில் இருந்த மற்றொரு செவிலியரிடம் இது குறித்து கூறி உள்ளனர். அந்த செவிலியர் அருகில் உள்ள செவிலியர் தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே பர்வீன் பானு தனது படுக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கோபமுற்ற உறவினர்கள் அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியதால் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து திருவாரூர் டிஎஸ்பி சிவராமன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், உறவினர்கள் இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் உடலை உடற்கூறாய்வுகாக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக துணை முதல்வர் தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் ஜோசப் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “உயிரிழந்த பெண்ணிற்கு ஏற்கனவே இருதய கோளாறு இருந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மயக்கம் ஏற்படும்போது உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு பணியில் இருந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இது குறித்து மருத்துவ கல்லூரி துணை முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது, எனக் கூறினார்.
0
0