கோவையைத் தொடர்ந்து திருவாரூரிலும் அராஜகம்.. அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு.. பேருந்து நிலையத்தில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan23 September 2022, 2:26 pm
திருவாரூர் : திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் வெளியூர் பேருந்துகள் திருவாரூரின் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று இரவு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்தவர்கள் யார் என்பது குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 4 இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றர்.
ஏற்கனவே, பிஎஃப்ஐ அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தியதால் கோவையில் பதற்றம் நிலவி வருகிறது. பேருந்துகளின் கண்ணாடிகளையும் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திய நிலையில், திருவாரூரிலும் அரசுப் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.