அரசு மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி… விபரீத முடிவுக்கான அதிர வைத்த பின்னணி!!
Author: Babu Lakshmanan20 July 2022, 4:44 pm
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காண்டுகள் படிப்பான பிஎஸ்சி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி மதுரையை சேர்ந்த செல்வகுமாரின் மகள் 19 வயதான சோபிகா.
இவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அருகிலுள்ள சிங்களாஞ்சேரி என்கிற ஊரில் தனது தோழிகளுடன் தனியாக வீடு எடுத்து தங்கி கல்லூரி சென்று வருகிறார்.
இந்த நிலையில், மாணவி சோபிகாவுக்கு கடந்த சில நாட்களாக அல்சர் காரணமாக கடுமையான வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, மனமுடைந்த சோபிகா தோழிகள் உறங்கியவுடன் பத்துக்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, மாணவி சோபிகா இது குறித்து தனது தோழிகளை எழுப்பி அவர்களிடம் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தோழிகள் உடனே 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்து சோபிகாவை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது சோபிகாவிற்கு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.