அரிவாள் வடிவில் கேக்… பேருந்து நிறுத்தத்தில் கெத்து காட்டிய இளைஞர்கள்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!
Author: Babu Lakshmanan30 July 2022, 1:54 pm
திருவாரூர் : அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேருந்து நிறுத்தத்தில் வெட்டி கெத்து காட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பேரளம் பேருந்து நிறுத்தத்தில் நேற்று மாலை பேரளம் வாய்க்கால் தெரு பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் மாதவன் என்பவரின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, அரிவாள் வடிவம் கொண்ட கேக்கை பேருந்து நிறுத்தத்தில் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசு பணிக்கு செல்பவர் என அனைவரும் பேருந்துக்காக காத்திருந்தனர். இந்த நேரத்தில் பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் இடையே ஏற்படுத்தும் வகையில், கூக்குரலிட்டும் கூச்சலிட்டும் இளைஞர்கள் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.
இந்த வீடியோ என்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பேரளம் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக கேக் வெட்டி கெத்து காட்டிய அஜய் குமார்(27), மணிகண்டன் (19), விஷ்ணு (19), பிரசாத் (26), ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள பர்த்டே பாய் மாதவன் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.