2023ல் இபிஎஸ்க்கு முதல் வெற்றி இந்த தேர்தல்தான்.. எழுதி வெச்சுக்கோங்க : முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உறுதி!!
Author: Udayachandran RadhaKrishnan1 February 2023, 10:34 am
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே, இடைத்தேர்தல் நெருக்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாஜகவுடனான கூட்டணி யாருக்கு என இன்னும் முடிவாகாததால் வேட்பாளர் அறிவிப்பு காலதாமதம் ஆனது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் போட்டியிட ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தென்னரசு 2016 ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை வேட்பாளராக அறிவித்த பின்னர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது, எடப்பாடியார் அவர்கள் வெற்றி வேட்பாளரை அறிவித்துள்ளார்.
கடுமையான போட்டி இருந்த காரணத்தினால் தான் வேட்பாளரை அறிவிக்க கால தாமதம் ஆனது. அனைவரிடமும் கலந்து ஆலோசித்து வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி மாதிரி தைரியமானவர் யாரும் இல்லை. திமுக அரசு வாக்குறிதியை நிறைவேற்றவில்லை. மாறாக சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு போன்றவற்றை அமல்படுத்தி உள்ளனர்.
எடப்பாடியாருக்கு முதல் வெற்றி ஈரோடு கிழக்கு தொகுதி தான். ஒற்றுமையாக இருந்து நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.