இது திராவிட மாடல் ஆட்சி அல்ல.. கஞ்சா ஆட்சி : அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்த சி.வி. சண்முகம் எம்பி!!
Author: Udayachandran RadhaKrishnan16 December 2022, 6:16 pm
திமுக தலைவர் ஸ்டாலின் மன்னரை போல் ஆட்சி செய்து வருகிறார். இது திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றும் கஞ்சா அரசு அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாவது, தமிழக முதல்வர் கனவு உலகத்தில் இருக்கிறார் தமிழக அரசு செயல்படுத்தி உள்ள மக்கள் விரோத திட்டங்களை கண்டித்து கடந்த ஒரு வாரமாக தமிழக முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.
ஆனால் அதைப்பற்றி முதல்வர் கவலை கொள்ளாமல் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் கவனமாக உள்ளார் ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக ஆனதும் விலைவாசி எல்லாம் குறைந்து விடுமா? பாலாறும், தேனாறும் ஓடுமா?, இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
இந்த ஜனநாயக நாட்டில் இன்றைக்கு திமுக மன்னரைப் போல ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. தாத்தா, அப்பா, பேரன் என தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார்கள். இதுதான் ஜனநாயகமா? சமூக நீதிப் பற்றி பேசும் திமுகவுக்கு இதுதான் திராவிட மாடலா என கேள்வி எழுப்பினார்.
திமுகவில் கருணாநிதி தவிர்த்து வேறு யாராவத தலைவர் பதவிக்கு சிந்தித்து கூட பார்க்க முடியாது. ஆனால் அதிமுகவின் சாதாரண தொண்டன் கூட முதல்வராக முடியும் தலைவராக முடியும். இந்தியாவிலேயே ஜனநாயக முறையில் செயல்படும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பது கஞ்சா மட்டுமே இது திராவிட மாடல் ஆட்சி அல்ல கஞ்சா ஆட்சி, அபின் ஆட்சி.
மக்களை தில்லுமுல்லு செய்து ஏமாற்றி மோடி மஸ்தான் வேலை காட்டுகிறது திமுக அரசு. அதிமுகவினரை காவல்துறை வைத்து அடக்கி விடலாமே என நினைத்தால் அது நடக்காது.
எத்தனை வழக்கு போட்டாலும் அத்தனை வழக்குகளின் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது ஏற்கனவே என் மீது 13 வழக்கு மேலும் எத்தனை வழக்கு போட்டாலும் அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.
காவல்துறையை வைத்து, லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்து முன்னுக்குப் பின் முரணான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அமைச்சர்களை காப்பாற்றும் வேலையை திமுக செய்து வருகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆணையர் கந்தசாமி அவர்கள் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்லி ஆக வேண்டும். அவரின் நடவடிக்கை அதிமுக தொடர்ந்து கண்காணித்து வருகிறது நாங்களும் வழக்கு போடுவோம் அதற்கு ஆட்சியில் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
மக்களைப் பற்றி சிந்திக்காத இந்த அரசு பாடம் புகட்ட வேண்டும் என்றால் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். இரட்டை இலைக்கு வாக்களித்தால் தான் திமுக அரசுக்கு மக்கள் கொடுக்கும் எச்சரிக்கையாக இருக்கும்.