தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு எதிரொலி… வீரசக்கதேவி கோவில் விழா நிறுத்திவைப்பு ; கருப்புக் கொடி ஏந்தி 200க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

Author: Babu Lakshmanan
12 May 2023, 2:00 pm

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி கோவில் விழா, காவல்துறையினரின் கட்டுப்பாடு காரணமாக திருவிழா நிறுத்தி வைப்பு; கருப்புக் கொடி ஏந்தி 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் வீரசக்கதேவி கோயில் விழாக்கள் ஆண்டுதோறும் தமிழ் மாதம் சித்திரை மாத கடைசி வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், வீரசக்கதேவி ஆலயத்தின் 67வது ஆண்டு சித்திரை திருவிழா இன்று துவங்கி (12.05.2023) முதல் 14.05.2023 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த விழாவில் ஆண்டுதோறும் ஏற்படும் சில பிரச்சனைகளால் போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதிமுறைகளை விதித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 6 மணியில் இருந்து 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பிறப்பித்துள்ளார்.

இவ்விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 68 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2050 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போலீசாரின் கட்டுப்பாடுகள் காரணமாக விழாவை தற்காலிகமாக நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. இதுகுறித்து ஆலய குழு தலைவர் முருக பூபதி செய்தியாளர்களிடம் கூறுகையில், பல்வேறு விதிமுறைகளை விதித்து வருவதால் ஜோதி கொண்டு வருவதில் பல்வேறு இடைஞ்சல்கள் ஏற்பட்டு வருகின்றன. மேலும் காலை முதன்முதலாக கயத்தார் கட்டபொம்மன் நினைவிடத்தில் இருந்து துவங்கப்பட்ட நினைவு ஜோதியை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். ஜோதியுடன் பைக் வரக்கூடாது என்று போலீசார் கூறுவதால் பைக்கில் வந்தவர்கள் இடைமறித்து நிறுத்தி உள்ளனர்.

இந்த விழாவில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே அதிக அளவில் பங்கேற்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறு விதிமுறைகளால் விழா நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இன்று காலை கோவில் பாஞ்சாலங்குறிச்சி கோவில் முன்பு நடக்க இருந்த கணபதி ஹோமம் மற்றும் உணவு வழங்கல் ஆகிய எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இதுபோன்ற விதிமுறைகளை போகிப்பதால் விழாவை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம். சிறப்பாக நடத்துவது என்பது எங்கள் மத்தியில் விருப்பமாக உள்ளது.

எனவே இனியும் இது போன்ற ஜோதிகள் வருவதில் பல்வேறு விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் போலீசார் தொடர்ந்து விதித்தால் இனி நீதிமன்றம் சென்று விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுப்போம் என்றார்.

மேலும், கோவில் அருகில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சந்ததியர் குடியிருப்பு பகுதியில் மக்கள் கருப்புக் கொடி ஏந்தி 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோவிலில் வழிபாடுகளோ, அன்னதானமோ கணபதி ஹோமமோ எதுவும் நடைபெறாததால் அந்த பகுதியில் ஒரு பரபரப்பும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 420

    0

    0