விடுமுறைக்கு வந்த ராணுவ வீரர் வீட்டில் சடலமாக மீட்பு.. நள்ளிரவில் நடந்த சம்பவம் ; வெம்பூர் கிராமத்தில் போலீசார் குவிப்பு..!!

Author: Babu Lakshmanan
17 October 2023, 5:09 pm

கோவில்பட்டி அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இராணுவ வீரர் நள்ளிரவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேதமுத்து என்பவரின் மகன் வேல்முருகன். இவர், கடந்த 2018-ல் இந்திய இராணுவத்தில் சேர்ந்து தற்போது ஜம்மு, காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இராணுவத்திலிருந்து ஒரு மாத விடுப்பில் தனது சொந்த ஊரான வெம்பூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு இராணுவ வீரர் வேல்முருகன் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த போது மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர், அதிகாலையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த இராணுவ வீரரை கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இதைத்தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற மாசார்பட்டி காவல்நிலைய போலீசார் சடலமாக கிடந்த இராணுவ வீரர் வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, அங்கு சென்ற தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விளாத்திகுளம் (பொறுப்பு) டி.எஸ்.பி லோகேஷ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், தனிப்படை போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, இராணுவ வீரர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக வெம்பூர் கிராமம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!