நள்ளிரவில் மேட்டுப்பட்டி கடற்கரையில் நடந்த சம்பவம்… நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்… போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
5 February 2024, 9:31 am

தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப் படகுக்கு மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து சங்கு குழி படகுகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் மீனவர். இவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் நேற்று காலை கடலுக்குச் சென்று விட்டு படகை மேட்டுப்பட்டி கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில், இவரது படகில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதில் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான முனீஸ்வரனுக்கு சொந்தமான நாட்டுப்படகு முற்றிலுமாக எரிந்து சேதமானது. இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை அந்தப் பகுதியில் ஏராளமான மீனவர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் மீன்வளத் துறையினர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டுப்பட்டி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் படகு தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தால் சுமார் 300-க்கும் மேற்பட்ட சங்கு குழி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…