இளைஞர்களுக்கு தடையில்லாமல் கஞ்சா சப்ளை… பட்டுராஜாவை பொட்டலத்துடன் தூக்கிய போலீசார்.. ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்..!!
Author: Babu Lakshmanan17 May 2023, 9:44 am
தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பட்டுராஜா என்பவரை தருவைகுளம் காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தருவைக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஜின்னா பீர்முகமது தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துமாலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தருவைக்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தருவைக்குளம் to வெள்ளப்பட்டி கடற்கரை சாலை அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்த பிளாரன்ஸ் மகன் பட்டுராஜா (37) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் குற்றவாளி பட்டுராஜாவை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து தருவைக்குளம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட குற்றவாளி பட்டுராஜா மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 6 வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சூரங்குடி காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் என தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலுல் உள்ள காவல் நிலையங்களில் மொத்தம் 8 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.