வாக்கிங் செல்பவர்களை குறிவைக்கும் கும்பல் ; அடுத்தடுத்து கைவரிசை காட்டிய 6 பேர் கைது… நகை, செல்போன்கள் பறிமுதல்..!!
Author: Babu Lakshmanan8 June 2023, 5:32 pm
ஓட்டப்பிடாரம் குறுக்கு சாலை ரோட்டில் வாக்கிங் சென்றவர்களிடம் அடுத்தடுத்து கைவரிசை காட்டிய கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம் வஉசி தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி (72) என்பவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவர் நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஓட்டப்பிடாரத்திலிருந்து குறுக்கு சாலை செல்லும் சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், இவரது தலையில் அரிவாளால் வெட்டி, கையில் அணிந்திருந்த இரண்டரை பவுன் எடை கொண்ட இரண்டு மோதிரங்களை பறித்து சென்றனர்.
தொடர்ந்து சுமார் 5.10 மணி அளவில் ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் அருகே வாக்கிங் சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற ஓட்டப்பிடாரம் கூட்டுறவு வங்கி செயலர் மாடசாமி (60) என்பவரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செயின், கைச்செயின் உள்ளிட்ட சுமார் 7 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
மேலும், வெட்டு காயம் அடைந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் மேற்பார்வையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன் உதவி ஆய்வாளர்கள் முத்துராஜா சதீஷ் நாராயணன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் புளியம்பட்டி கோவில் வளாகத்தில் ரூம் எடுத்து தங்கி இருப்பதாக தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்று அங்கிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஓட்டப்பிடாரம் பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் ஓட்டப்பிடாரம் வழிப்பறி சம்பவத்திற்கு முன்னதாக அதே நாளில் தூத்துக்குடி நான்காம் கேட் , சவேரியாபுரம், சிப்காட் உள்ளிட்ட பகுதிகளிலும் செல்போன்கள் மற்றும் ரூபாய் 8000 பணத்தை வழிப்பறி செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தூத்துக்குடி கோவில் பிள்ளை விளை பகுதியைச் சேர்ந்த மகாராஜா (19), தூத்துக்குடி சென்மேரிஸ் காலனியைச் சேர்ந்த சியாம் டேவிட் (19), தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (19), தூத்துக்குடி பாத்திமாநகரை சேர்ந்த மோகித் (19) புளியம்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்த ரோஷன் (19) மற்றும் புளியம்பட்டியில் ரூம் எடுத்துக் கொடுத்து திருடிய நபர்களுக்கு உதவியாக இருந்த தூத்துக்குடி இனிகோநகரை சேர்ந்த ஜவகர் (44) ஆகியோரை கைது செய்து திருடிய நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.