மைனா பட பாணியில் நடந்த சம்பவம்… போலீஸ் பிடியில் இருந்து தப்பிய விசாரணைக் கைதி… மனைவியுடன் வெளியூருக்கு எஸ்கேப்..!!
Author: Babu Lakshmanan12 January 2024, 9:29 am
தூத்துக்குடியில் தப்பி ஓடிய விசாரணை கைதி, தனது மனைவியையும் அழைத்து சென்று இருப்பது தெரியவந்தது. இரண்டு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் செல்வசதீஷ் என்ற சூபி (வயது 24). இவர் நண்பரை கொலை செய்த வழக்கில் கடந்த 9.5.2022 முதல் ஜெயிலில் இருந்து வந்தார். இவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தென்பாகம் போலீசில் குற்றவாளிகள் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.
நண்பரை கொலை செய்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு கடந்த 9ம்தேதி விசாரணைக்கு வந்தது. இதற்காக தூத்துக்குடி பேரூரணி ஜெயிலில் இருந்த செல்வசதீசை ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருவர் மற்றும் 2 பயிற்சி போலீஸ் உள்பட 5 பேர் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
அவர்கள் சுமார் 11.30 மணி அளவில் நீதிமன்றங்களுக்கு வந்து சேர்ந்தனர். அங்கு நின்றபோது, செல்வசதீஷ் திடீரென கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர். அப்போது, கழிவறை ஜன்னலை உடைத்து செல்வசதீஷ் தப்பிச் சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய கைதியை பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். விசாரணையில், நீதிமன்ற வளாத்தில் இருந்து தப்பிய செல்வசதீஷ், நேரடியாக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு தயாராக இருந்த தனது மனைவியை தன்னோடு அழைத்து சென்றுள்ளார். அதே நேரத்தில், அவரது குழந்தையை அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டு சென்று இருப்பதும் தெரியவந்தது. இதனால் செல்வசதீஷ் வெளியூருக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.