கிராமப் பெண்களை குறிவைத்து மோசடி செய்யும் ஆசாமி… அரசு மின் மீட்டரை கொடுத்து கல்லா கட்டிய சம்பவம் ; விசாரணையில் பகீர்…!!
Author: Babu Lakshmanan2 June 2023, 3:55 pm
தூத்துக்குடி ; மின்வாரிய ஊழியர் என்று கூறி கோவில்பட்டி பகுதியில் மேலும் ஒரு மோசடி சம்பவம் அரங்கேறியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் மின் வாரிய ஊழியர் என்று கூறி, அங்குள்ள குணசுந்தரி என்ற பெண்ணிடம் தமிழக அரசின் மின் மீட்டரை கொடுத்து ரூ 5,500 மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இது தொடர்பான செய்தி ஒளிப்பரப்பான நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், புதிய மின் மீட்டர் மாட்டுவதாக யாரும் வந்தாலும், மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கோவில்பட்டி கோட்ட மின்வாரிய அலுவலகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் அந்த மர்ம ஆசாமி கோவில்பட்டி அருகேயுள்ள படர்ந்தபுளி கிராமத்தில் தனது கைவரிசையை காட்டியுள்ளார். அந்த ஊரைச் சேர்ந்த ஆதிலெட்சுமி என்பவர் தனது வீட்டிற்கு மும்முனை மின்சார இணைப்பு கேட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் அதற்கான இணைப்பு தற்பொழுது வரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் டிப் -டாப்பாக வந்த ஆசாமி ஆதிலெட்சுமி வீட்டிற்கு சென்று மின்சாரவாரிய அலுவலகத்தில் இருந்து வருவதாகவும், தங்களுக்கு மும்முனை இணைப்பு வந்துள்ளது. அதற்கான மின் மீட்டர் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ஆதிலெட்சுமியின் குடும்பத்தினர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இருந்த அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையெடுத்து ஆதிலெட்சுமி வீட்டிற்கு அந்த மர்ம ஆசாமியிடம் கேட்ட போது, மின்மீட்டர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அதற்கு 5100 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது, அருகில் இருந்த ஆதிலெட்சுமியின் சகோதாரர் திருப்பதி என்பவரும் அந்த மர்ம ஆசாமியிடம் விசரித்துள்ளார். அதற்கு அந்த ஆசாமி மின்சாரத்துறை அதிகாரி போல் பேசியுள்ளார். இதற்குள்ளாக ஆதிலெட்சுமி 5500ரூபாய் வழங்கியுள்ளார்.
அதனை பெற்றுக்கொண்ட அந்த ஆசாமி 500 ரூபாயை ஆதிலெட்சுமியிடம் கொடுத்து தன்னிடம் சில்லறை இல்லை என்றும், அடுத்து முறை வரும் போது தரவும் எனறு கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஆதிலெட்சுமியின் சகோதரர் திருப்பதி, படர்ந்தபுளி கிராமத்திற்கு வரும் வயர்மேன் முத்துவேல் என்பவரை தொடர்பு கொண்டு, வீட்டிற்கு உங்கள் அலுவலகத்தில் இருந்து மின் மீட்டர் கொடுத்துள்ளனர். வந்து மாட்டி தரும்படியும், மின்சார துறையில் இருந்து வந்த அலுவலரும் இங்கு இருப்பதாகவும் தெரிவித்து மட்டுமின்றி, அந்த போனை மர்ம ஆசாமியிடம் கொடுத்துள்ளார்.
போனை வாங்கி பேசிய அந்த மர்ம ஆசாமி அலுவலகத்தில் இருந்து வந்து இருக்கிறேன் என்று கூறி விட்டு அழைப்பினை துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தான் நிறைய கிராமங்களுக்கு செல்ல வேண்டிய இருக்கிறது என்று கூறி விட்டு ஆதிலெட்சுமியிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்கி விட்டு அவசரமாக கிளம்பி சென்றுள்ளார்.
இதையெடுத்து அலுவலகத்திற்கு சென்று முத்துவேல் நடந்தவற்றை கூறியுள்ளார். அதன் பின்னர் அந்த மர்ம ஆசாமி மின்வாரிய ஊழியர் என்று கூறி 5000 பணத்தினை ஏமாற்றி சென்றது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
இது குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்ட போது, தற்பொழுது தான் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. விசாரணை நடத்திய பின்னர் தான் முழுமையாக கூற முடியும் என்று கூறி விட்டனர். அந்த மர்ம ஆசாமி அவசர அவசரமாக சென்றதை பார்த்த ஆதிலெட்சுமியின் சகோதரர் திருப்பதி – அந்த மர்ம ஆசாமி சென்ற வாகனத்தின் எண்ணை பார்த்துள்ளார். அது ஸ்கூட்டி வண்டி என்றும் டி.என்.65 – 0145 என்ற எண் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மின்வாரிய ஊழியர் என்று கூறி போலி ஆசாமி பெண்களை குறி வைத்து அரசின் மின் மீட்டர்களை கொடுத்து பணம் மோசடி செய்து வரும் சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஆதிலெட்சுமி 3 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் செய்து இருந்தாக கூறப்படுகிறது. இது எப்படி அந்த மர்ம ஆசாமிக்கு தெரிந்தது என்பது பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
0
0