இதுக்கு தெர்மாகோலே பரவால… கழிவுகளால் கண்மாயில் உருவான வெண்நுரை ; நகராட்சி நிர்வாகம் செய்த செயல் ; கடுப்பான பொதுமக்கள்..!!!
Author: Babu Lakshmanan11 November 2023, 10:37 am
தூத்துக்குடியில் நீர்வரத்து கால்வாயில் சென்ற வெண்நுரையை தண்ணீர் ஊற்றி அழிக்க நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்தின் செயலால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு நீர் நிலைகள் நிரம்பும் சூழ்நிலை உள்ளது. மூப்பன்பட்டியில் உள்ள இரண்டு கால்வாய் நிரம்பி, நகராட்சிக்குட்பட்ட சங்கலிங்கபுரம் வழியாக செல்லும் நீர் நீர்வரத்து கால்வாய் வழியாக குறிஞ்சம்குளம் கண்மாய்க்கு தண்ணீர் மறுகால் சென்று வருகிறது.
அவ்வாறு தண்ணீர் செல்லும் போது ஆளு உயரத்திற்கு வெண் பஞ்சு போன்று நுரை தள்ளியவாறு செல்கிறது. அவ்வாறு செல்லும் நுரை செல்லும் போது துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் செயல்பட்டு வரும் ஆலைக்கழிவுகள் நீருடன் கலப்பதால் வெண் நுரை செல்வது மட்டுமின்றி, துர்நாற்றம் வீசுவதாகவும், இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் சுமார் 500 ஏக்கரில் விவசாய பணிகள் சரிவர மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், நீர்வரத்து கால்வாயில் அதிக வெண் நுரையுடன் தண்ணீர் செல்லும் நிலையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், நீர்வரத்து கால்வாயில் செல்லும் தண்ணீரை எடுத்து, வெண் நுரை மீது ஊற்றி அழித்தனர்.
செய்தியாளர்கள் படம் எடுப்பதை பார்த்ததும், தூய்மை பணியாளர்கள் மேஸ்திரி, தண்ணீரை எடுத்து ஊற்ற அப்பகுதியில் உள்ள மக்களிடம் இருந்து 2 பிளாஸ்டிக் வாளிகளை வாங்கி கொடுத்தார். அவர்கள் நீண்ட நேரம் நுரை மீது தண்ணீரை ஊற்றியும் வெண் நுரை அதிகமாக வந்ததால், வாறுகால் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் குச்சிகளை கொண்டு நுரைகளை அழிக்க முயற்சி செய்தனர்.
எல்லா அறிவாளிகளும் நம்ம ஊருல தான் இருக்காங்க என்று திரைப்பட நகைச்சுவை நடிகர் சிங்கம்புலி ஒரு படத்தில் சொன்ன வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
ஆலைக்கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கமால், நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு அழிக்க நினைத்த சம்பவம் வேடிக்கையாக இருந்த போதிலும், தங்களுக்கு நிரந்தர தீர்வு காண அரசும், நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0