ரத்தம் படிந்த கத்தரியை கழுவும் சிறுவன்… வீடியோ எடுத்த நிரூபருக்கு சிக்கல்… காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பத்திரிக்கையாளர்கள்!!
Author: Babu Lakshmanan13 December 2023, 6:48 pm
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை கருவிகளை சிறுவன் கழுவியதை வீடியோ எடுத்த நிரூபரை காவல்நிலையம் அழைத்து வந்ததைக் கண்டித்து காவல் நிலையத்தை பத்திரிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள் பல்வேறு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர் பற்றாக்குறை உள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த கத்திரிக்கோல் மற்றும் கத்தியை சிறுவன் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி சோட்டையின் தோப்பு பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் சர்க்கரை நோய் காரணமாக காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்தாவது தளத்தில் உள்ள ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காலில் இருந்த ஒரு விரல் அகற்றப்பட்டு தொடர்ந்து ஐந்தாவது மாடியில் சிகிச்சையில் இருந்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி நோயாளி பவுல் ராஜிக்கு அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பழைய கட்டை அவிழ்த்துவிட்டு புதிய கட்டு போடக்கூடிய பணியை செய்துள்ளனர். அப்போது பயன்படுத்திய கத்தரி மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளை பவுல்ராஜின் மகன் சிறுவன் கத்திரிக்கோலை சுத்தம் செய்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது. இது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டதாக தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த தினகரன் நாளிதழ் நிருபர் ஆண்டனி இன்பராஜ் என்பவரை தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் போலீசாரின் இந்நடவடிக்கையை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
0
0