பிணங்களை மாற்று இடத்திற்கு மாற்றும் ஊழியர்கள்… வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை.. ஷாக் வீடியோ!!
Author: Babu Lakshmanan20 December 2023, 9:42 pm
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழந்துள்ளதால் உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு பெய்த அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டதால் நகர்ப்புறங்களை வெள்ள நீர் சூழந்தது. மேலும், குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. மேலும், வெளியே வர முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்ததால் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே, தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய குழு இன்று ஆய்வு செய்தது. தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை இன்னமும் வெள்ளத்தில் இருந்து மீண்டு வரவில்லை. வெள்ள நீர் இன்னும் வடியாததால் போதிய இடவசதியில்லாமல், உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்றுக்கும் மேற்பட்ட உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.