சினிமாவை மிஞ்சிய கொலை சம்பவம்… லாரிசெட் மீது குண்டுவீசி லாரி அதிபர் வெட்டி படுகொலை : மர்ம கும்பல் வெறிச்செயல்..!!
Author: Babu Lakshmanan17 August 2023, 9:36 am
தூத்துக்குடியில் லாரி செட்டில் அதன் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியைச் சேர்ந்தவர் ஜெகவீர பாண்டியன் மகன் சக்திவேல் (55). லாரி செட் அதிபர். இவர் நேற்று மாலை 6 மணி அளவில் தனது லாரி செட் வெளியே உட்கார்ந்திருந்தபொழுது, 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இவர் மீது 2 குண்டுகளை வீசியுள்ளது. அதில் அதிர்ஷ்ட வசமாக தப்பினார். ஒரு குண்டு மட்டுமே அவர் அருகில் வெடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தப்பியோடிய அவர், மீண்டும் திரும்பி வந்து எதற்காக என் மீது தாக்குதல் நடத்துகிறீர்கள் என கேட்டபொழுது, அவரை சுற்றி வளைத்த 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. இதில், சம்பவ இடத்திலேயே சக்திவேல் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் இறந்த சக்திவேலின் உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு காணப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ரூரல் டிஎஸ்பி சுரேஷ், நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மற்றும் சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சங்கரப்பேரியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி இரவு தனது மாமியார் வீட்டில் இருந்தபோது, சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கருப்பசாமி மீது ஏற்கனவே 3 கொலை வழக்குகள் உள்ளது.
இதில், கருப்பசாமி கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டதில் சக்திவேல் 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இந்த கொலைக்கு இவர் தான் மூல காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கொலை நடந்து ஒருமாதம் ஜெயிலில் இருந்த சக்திவேல் அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலைக்கு பழிக்கு பழியாக சக்திவேல் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது சம்பந்தமாக சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ஜினு என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வெடிக்காத ஒரு குண்டை செயல் இழக்க செய்து, குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது