பார்க்கில் தனிமையில் இருந்த காதல் ஜோடி…. வீடியோ எடுத்து மிரட்டிய ஆயுதப்படை போலீஸ் ; தலைமறைவான நிலையில் கைது..!!

Author: Babu Lakshmanan
28 March 2024, 4:27 pm

தூத்துக்குடி, கடற்கரை பூங்காவில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டி செயினை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருநெல்வேலி ஆயுதப்படை போலீசார் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாநகர், சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகணேஷ், இவர் கடந்த 8ம் தேதி தனது காதலியுடன் முத்துநகர் கடற்கரை பூங்காவிற்கு வந்துள்ளார். அங்கு இளைப்பாறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குடை போன்ற பகுதியில் பிற்பகலில் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இருவரையும் செல்போனில் படம் எடுத்ததுடன் பாலகணேசின் காதலியை புகைப்படம் எடுத்துள்ளார்.  பின்னர் இருவரையும் மிரட்டிய அந்த வாலிபர் இருவரது புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதுடன், படத்தை வெளியிடாமல் இருக்க பால கணேசன் காதலியிடமிருந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து சென்றுள்ளார். இதனால் காதல் ஜோடி அதிர்ச்சி அடைந்தது.

இதையடுத்து, பாலகணேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சம்பவத்திற்கு அடுத்த நாள் அதே முத்துநகர் கடற்கரை பகுதிக்கு தன்னிடம் செயினை பறித்த நபர் அங்கு இருக்கிறாரா..?  என தேடினர். அப்போது, செயினை பறித்த அதே நபர் அங்கு நின்று கொண்டு இருந்ததை பார்த்த பால கணேஷ் நண்பர்கள் அவரை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது, அந்த நபர் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளார்.

செயின் பறிப்பில் ஈடுபட்ட அந்த வாலிபர் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு பாலகணேஷ் வடபாகம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து விளக்கம் அளித்து புகார் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் இதைத் இருசக்கர வாகனத்தை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த இருசக்கர வாகனம் நெல்லையில் காணாமல் போன இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, நடத்திய விசாரணையில், அந்த இருசக்கர வாகனத்தை எடுத்து வந்தது தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த டென்னிஸ் ராஜ் என்பது தெரிய வந்தது. மேலும், டென்னிஸ் ராஜ் மணிமுத்தாறு பாட்டாலியனில் காவலராக இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த டென்னிஸ் ராஜை வடபாகம் போலீசார் இன்று கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலியை பயிரே மேய்ந்த கதை போல் தூத்துக்குடியில் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த ஆயுதப்படை காவலர் இளம் காதல் ஜோடியை மிரட்டி செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 386

    0

    0