ஒரு ஆம்லெட்டுக்காக நடந்த கொலை.. மைத்துனரை கொலை செய்த தங்கையின் கணவர் கைது; 6 குழந்தைகள் பரிதவிக்கும் அவலம்..!!

Author: Babu Lakshmanan
5 August 2023, 2:26 pm

தூத்துக்குடி ; கல்பாக்கம் அருகே ஆம்லெட்க்-காக மதுபோதையில் மைத்துனரை கொலை செய்த தங்கையின் கணவர் கைது செய்யப்பட்டார். தந்தை கொலை செய்யப்பட்டதால் 6 குழந்தைகள் பரிதவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஐந்துகாணி இருளர் பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் (30). இவரது தங்கை கஸ்தூரி என்பவரின் கணவர் முருகன் (32), இருவரும் தினக்கூலி வேலைக்கு செல்லுதல், பகுதி நேர வேலையாக காகிதம், பிளாஸ்டிக் பாட்டில்களை பொறுக்கி காயலான் கடைக்கு கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் செய்து வருகின்றனர். மாமன்-மச்சான் உறவு முறையை சேர்ந்த இருவரும் சம்பாதிக்கும் பணத்தில் மது அருந்துவது வழக்கமாம்.

கல்பாக்கம் – புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கார் ஷோரூம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் செல்லப்பன் – முருகன் இருவரும் தாங்கள் வாங்கி மதுவை குடித்துள்ளனர். அப்போது, செல்லப்பன் மதுவுடன் சைடிஷ் ஆக சாப்பிடுவதற்காக இரண்டு ஆம்லெட் வாங்கி வந்துள்ளார். அதை முருகன எடுத்து சாப்பிட்டுவிட்டதாக கூறப்பகிறது. அதனால், இருவருக்கும் இடையே வாயத்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

இந்நிலையில், முழு குடி போதையில் இருந்த முருகன் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து செல்லப்பனை உருட்டு கட்டையால் தாக்கியதில் தலையில் மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார். பின்னர், இதுகுறித்து வாயலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ஐந்துகாணி அப்துல்உசேன் இக்கொலை சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்து புகார் செய்தார்.

பிறகு புகாரின் பேரில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் உத்தரவின்பேரில், கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்டோனி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து ரத்த வெள்த்தில் இறந்து கிடந்த செல்லப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு, அங்கேயே குடிபோதையில் நிதானமின்றி படுத்து கிடந்த முருகனை கைது செய்து இக்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செல்லப்பனுக்கு மாரி என்ற மனைவியும், 3 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் என மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர்.

குறிப்பாக, கடந்த 8 மாதத்திற்கு முன்பு செல்லப்பன் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 2 குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு ஆம்லெட்டுக்காக தனது கணவர் கொலை செய்யப்பட்டு, தற்போது 6 குழந்தைகளும் அனாதையாக நிற்கும் மனைவி மாரி 6 குழந்தைகளையும் எப்படி வளர்ப்பேன் என கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

குறிப்பாக, 6 குழந்தைகளில் வளர்ந்து நிற்கும் 4 குழந்தைகளும் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆம்லெட்டுக்காக நடந்துள்ள இக்கொலை சம்பவம் வாயலூர் ஐந்துகாணி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கொலையாளி முருகனின் மனைவி கஸ்தூரி (செல்லப்பன் தங்கை) 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் ஒன்றில் இறந்துவிட்டதாகவும், அவரது 2 பிள்ளைகள் தாம்பரத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2-வது திருமணம் செய்து கொள்ளாமல் தன்னந்தனியாக வசித்து வரும் முருகன் தினமும் சம்பாதிக்கும் பணத்தில் ஊதாரித்தனமாக ஒரு பொறுப்பிள்ளாமல் சுற்றி வந்து தினமும் மதுபோதைக்கு அடிமையாகி இக்கொலை சம்பவத்தில் அவரை ஈடுபட வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!