திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா : யாகசாலை பூஜையுடன் தொடக்கம்.. கடலில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய பக்தர்கள்…!!

Author: Babu Lakshmanan
13 November 2023, 3:47 pm

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாற்றை உணர்த்தும் திருவிழா கந்த சஷ்டி திருவிழாவாகும். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா (நவ. 13) திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜைகளாகியது.

அதிகாலையிலேயே ஆயிரம் கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்கள் விரதத்தை துவக்கினர். இதனால் திருக்கோயில் வளாகமே கூட்டத்தில் நிரம்பி வழிகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நவ. 18-ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 4 மணிக்கு சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவல் குழுத்தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில் முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?