தூத்துக்குடி மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் காரணமல்ல… மீண்டும் ஆலையை திறங்க… மாவட்ட ஆட்சியரிடம் கடலோரவாழ் மக்கள் மனு..!!
Author: Babu Lakshmanan31 October 2022, 3:55 pm
தூத்துக்குடி மாசு ஏற்படுவதற்கு ஸ்டெர்லைட் காரணம் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கிராம மக்கள் மற்றும் கடலோர பகுதி வாழ் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற போராட்டத்தால் மூடப்பட்டது. இதன் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
சங்கரப்பேரி, மீளவிட்டான், மடத்தூர், தெற்கு வீரபாண்டியபுரம், அய்யனடைப்பு, சோரீஸ்புரம், சில்லாநத்தம், தெற்கு சிலுக்கான்பட்டி,சில்வர் புரம், புதூர் பாண்டியாபுரம், ஆகிய கிராம மக்கள் மற்றும் மட்டகடை, திரேஸ்புரம், பூபாலராயர்புரம், லூர்தம்மாள்புரம்,அன்னை திரேசா மீனவர்காலனி, லயன்ஸ்டோன், அலங்காரத்தட்டு ஆகிய கடலோர பகுதிவாழ் மக்களும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மனுஅளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடி ஸ்டெர்லைட் அணியினால் மாசு இல்லை என்பதை தெளிவான தெரிந்து கொண்டுள்ளோம். தூத்துக்குடி மாசு ஏற்படுவதற்கு வாகன புகை, சாலை தூசுவால் தான் மாசு என்பதை உணர்ந்துள்ளோம். கேன்சர் நோய் பட்டியல் இடத்தில் தூத்துக்குடி எத்தனை இருக்கிறது ஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் வருகிறது என பொய்யான வதந்திகளை பரப்பியதால் இந்த ஆலை மூடப்பட்டு நான்கரை ஆண்டுகள் ஆகிறது.
இதனால் பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர் இன்னும் வருங்கால சந்ததியினர் வேலைவாய்ப்பை பெற வேண்டுமானால் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட வேண்டும். தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வி பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
மனு அளித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தூத்துக்குடி மாநகர மக்கள் கூறியதாவது :- இந்த ஊர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே இந்த ஆலை திறக்கப்பட்டால் இழந்தவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதுடன், மேலும் பல இளைஞர்கள் உட்பட பலர் வேலைவாய்ப்பை பெறமுடியும், என கூறினர்.