செயின் திருடிய சம்பவம்… புகாரளிக்க வந்த காவலருக்கு காவல் நிலையம் முன்பு அரிவாள் வெட்டு : ஒருவர் கைது…!!

Author: Babu Lakshmanan
29 March 2023, 11:29 am

தூத்துக்குடி : புகார் அளிக்க வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலரை காவல் நிலையம் முன்பு அரிவாள் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முடிவைதானந்தல் மேலத்தெரு சார்ந்த இசக்கிமுத்து மகன் சுரேஷ்பாபு. இவர் அப்பகுதியில் ஒரு கல்யாண வீட்டிற்கு சென்றபோது, அவரது செயின் காணாமல் போனது. இது குறித்து சந்தேகம் அடைந்த அவர், அப்பகுதியை சார்ந்த பேச்சிமுத்து மகன் முத்து செல்வத்திடம், “நீ தான் திருடி விட்டாய்”, எனக் கூறியதால் இருவருக்கும் திருமண வீட்டில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சுரேஷ்பாபு புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இருவரையும் புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு இன்று அழைத்துள்ளனர்.

அவ்வாறு விசாரணைக்கு வந்த முத்து செல்வம் மற்றும் அவரது சகோதரர் மகாராஜன் இருவரும் சேர்ந்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சுரேஷ்பாபுவிடம் தகராறு செய்து அவரின் கால் முட்டியின் கீழ் அருவாளால் வெட்டியுள்ளனர். சுரேஷ்பாபு தாக்கியதில் முத்து செல்வத்திற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காயம் அடைந்த இருவரையும் சக போலீஸ்காரர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து செல்வம் மற்றும் அவரது சகோதரர் மகாராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Shine Tom Chacko jumps out of hotel window to escape from police during drug raid போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!