தனியார் பேருந்தின் மீது பயங்கரமாக மோதிய கார்… அப்பளம் போல நொறுங்கி விபத்து.. 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு ..!!

Author: Babu Lakshmanan
20 December 2022, 12:05 pm

தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே தனியார் பேருந்து மற்றும் கார் மோதிய பயங்கர விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த லட்சுமணப் பெருமாள் மகன் கீர்த்திக் (23). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை கல்லூரி முடித்து கீர்த்திக் தனது கல்லூரி நண்பர்களான, கோவில்பட்டி அருகே வானரமுட்டியை அடுத்த வெயிலுகந்தபுரத்தைச் சேர்ந்த உதயகுமார் மகன் செந்தில்குமார் (24), கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் மேலதெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் அஜய் (23), கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1வது தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் அருண்குமார் (21), விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ் (23) ஆகியோருடன் கோவில்பட்டிக்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

இளையரசனேந்தல் சாலையில் தனியார் கல்லூரி அருகில் உள்ள பாலத்தில் வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் – கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கீர்த்திக், செந்தில் குமார், அஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அருண்குமார், விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரிக் கண்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு துறையினர் வீரர்கள் உதவியுடன் இடிபாடுகளின் சிக்கி இருந்த 3 பேரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் தனியார் பேருந்தில் வந்து காயமடைந்த தனியார் கல்லூரி தோட்ட தொழிலாளி பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த மாடசாமி (62) என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 596

    0

    0