தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : 35 ஆம் கட்ட விசாரணை தொடக்கம்…!

Author: kavin kumar
24 January 2022, 2:57 pm

தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு நபர் ஆணையத்தின் 35 வது கட்ட விசாரணையில் கலவரத்தின் போது திருநெல்வேலி சரக டிஐஜி-ஆக பணியிலிருந்த கபில்குமார் சரத்கார் ஆஜரானார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் 35வது கட்ட விசாரணை இன்று (திங்கள்கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை நடக்கிறது. ஒருநபர் ஆணையத்தில் இதுவரை நடந்த விசாரணையில் 1,417 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,037 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. இன்று தொடங்கவுள்ள 35வது கட்ட அமர்வில் ஆஜராகி விளக்கமளிக்க முன்னாள் காவல்துறை துணைத்தலைவர், தென்மண்டல காவல்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட 6 முக்கிய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஒருநபர் ஆணையத்தின் இன்று நடைபெறும் 35வது கட்ட அமர்வின் முதல் நாள் விசாரணையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தின் பொழுது திருநெல்வேலி சரக டிஐஜி-ஆக பணியிலிருந்த கபில்குமார் சரத்கார் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். தொடர்ந்து நாளை, தென் மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பிலிருந்த சைலேஷ்குமார் யாதவ், அதைத் தொடர்ந்து வரும் வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரனும் ஆஜராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • K-pop singer Wiesung death அதிர்ச்சி.! பிரபல பாடகர் வீட்டில் மர்மமான முறையில் மரணம்..!