புனித சவேரியார் ஆலயத்தின் 134 வது ஆண்டு திருவிழா ; கொடியேற்றத்துடன் களைகட்டியது சின்ன கோவா..!!

Author: Babu Lakshmanan
25 November 2022, 8:54 am

தூத்துக்குடியில் உள்ள சின்ன கோவா என்று அழைக்கப்படும் புனித சவேரியார் ஆலயத்தின் 134 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடி அருகே உள்ள சின்ன கோவா என்று அழைக்கப்படும் சவேரியார்புரத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புனித சவேரியாரின் விரல் பாதுகாக்கப்பட்டு பக்தர்களின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் 134வது திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, டிசம்பர் 03ம் தேதி வரை 10 பத்து நாட்கள் திருவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. வரும் 30ம் தேதி அன்று இரவு புனித சவேரியாரின் சப்பரப்பவனியும், டிசம்பர் 1ம் தேதியன்று இரவு நற்கருணை பவனியும், டிசம்பர் 2ம் தேதி காலை புது நன்மை திருப்பலி, அன்று மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மாலை ஆராதனையும், டிசம்பர் 03ம் தேதி திருவிழா ஆடம்பர பாடல் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து மாதா மற்றும் சவேரியாரின் சப்பரப்பவனியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற திருப்பலியை பங்கு தந்தை குழந்தை ராஜன் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கொடிபவனி நடைபெற்றது. பின்னர் ஆலயம் எதிரே உள்ள கொடி மரத்தில் மறைவட்ட முதன்மை குரு பேரருட்தந்தை பென்சன் தலைமையில் திருகொடியேற்றம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அருள் தந்தையர்கள் பலர் கலந்து கொண்டனர். சவேரியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சவேரியார் திருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் காலை சிறப்பு திருப்பலி மற்றும் மாலை நற்கருணை ஆராதனை நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனித சவேரியாரின் சப்பர பவனி வரும் டிசம்பர் 3-ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை குழந்தை ராஜன், ஊர் நிர்வாகிகள், அருள் சகோதரிகள் மற்றும் இறைமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 441

    0

    0